திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.52 திருநெடுங்களம்
பண் - பழந்தக்கராகம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
2
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
3
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
4
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ வேவணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
5
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியினை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
6
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
7
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
8
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
9
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
10
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com